பென் ஸ்டோக்ஸ் பந்துவீசுவதற்கு முழு உடல்தகுதி அடையும் வரை அணி நிர்வாகம் காத்திருக்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து டெஸ்ட் கேப்டனான பென் ஸ்டோக்ஸ் ஆஷஸ் தொடரின் போது முழு உடல்தகுதியை எட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். ஐபிஎல் தொடருக்கு தயாராகும் விதமாக தனது இடது முட்டியில் கார்ட்சோன் ஊசி செலுத்திக் கொண்டார். முன்னதாக ஐபிஎல் தொடரில் ஒரு பேட்டராக மட்டுமே ஸ்டோக்ஸ் விளையாடுவார் என இஎஸ்பின் கிரிக்கின்ஃபோ செய்தி வெளியிட்டிருந்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நான்காவது இடத்தில் ஆடிய ஸ்டோக்ஸ் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பந்துவீசவில்லை. ஆட்டம் முடிந்த பின்னர் ஊடகங்களிடம் பேசிய சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், ஸ்டோக்ஸ் உடல்தகுதி மேம்பட்டு வருவதாக தெரிவித்தார்.மேலும் ஸ்டோக்ஸ் 100 சதவீதம் உடற்தகுதியை எட்டும் வரை அவரை பந்துவீசுவதற்கு பணிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
குஜராத் டைட்டன்ஸ் உடனான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டும் பயன்படுத்தியது. ஆல்ரவுண்டர்கள் மொயீன் அலி, ஷிவம் துபே பந்துவீசவில்லை. ஸ்டோக்ஸ் விரைவில் முழு உடல்தகுதியை எட்டுவார்; தொடரின் இரண்டாவது பகுதியில் பந்துவீசுவார் என்று ஸ்டீபன் பிளமிங் நம்பிக்கை தெரிவித்தார்.